தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ள போதும், பெருந்தோட்டக் கம்பனிகள் அதனை கொடுக்க முடியாது என்ற விடாப்பிடியில் இருக்கின்றது என்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 16 கற்கை நெறிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கம்பனிகளுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுத்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இது ஒரு நல்ல விடயமாகும் இதனை அரசாங்கம் முன்னெடுத்தால் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப்பேச்சுவார்த்தை மட்டுமல்ல அதில் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனை அறியாதவர்களே அதிலிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தொழிலாளர்களின் நலனை எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் 100 – 150 மாணவர்களே கல்விகற்று வந்தனர். ஆனால் இன்று 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கொழும்புத் துறைமுக கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு கொடுத்திருப்பார்கள் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.