November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ஆஜர்!

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகியுள்ளார்.

இன்று முற்பகல் மைத்திரிபால அந்த ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள நிலையில் அவரிடம் அந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் அந்த ஆணைக்குழுவில் இன்றைய தினத்தில் ஆஜராகியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன வசமே பாதுகாப்பு அமைச்சு இருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு விசாரணைகளில் பாதுகாப்பு அமைச்சு தமது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும் அந்த குற்றச்சாட்டுகளை மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்ததுடன் அதில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டு அவரின் ஊடகப் பிரிவு நேற்றைய தினத்தில் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் மைத்திரிபால சிறிசேன அந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக ஆஜராகியுள்ளார்.