இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு இலங்கை அரசாங்கம் வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கையினுடைய அயல் நாடாக இருக்கின்றது. எங்களை பொறுத்தவரையில் இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற விதமாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம் என்று கஜேந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பல இடங்களிலே சீனாவிற்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற சூழலிலே இந்தியா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும், இந்த இடத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.