அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்தும் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், அரசகரும மொழிகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் அதன் அலுவலகத்திற்கு சென்றிருந்த போதே இவ்வாறாக பணிப்புரை வழங்கியுள்ளார்.
அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பிரதான பொறுப்பு அந்த ஆணைக்குழுவிற்கே இருப்பதாக இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச மொழிக் கொள்கை தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல், பரிந்துரை வழங்குதல், கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பாக கண்காணித்தல் ஆகிய பணிகள் இந்த ஆணைக்குழுவிற்கு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ஆகிய தரப்புக்களுக்கு மொழி அறிவை வழங்கும் பொறுப்பும் இருப்பதாகவும், இதனால் ஆணைக்குழுவின் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.