இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியமை, நாட்டில் மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழும் அபாயத்தைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா அறிக்கை இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுடன் இலங்கையின் பதிலளிக்கும் காலம் முடிவடைந்துள்ளது.
இலங்கையில் தண்டனையை ஆழப்படுத்துதல், அரசாங்கத்தின் செயற்பாடுகளை இராணுவமயமாக்கல், இனவாத- தேசியவாத சொல்லாட்சி மற்றும் சிவில் சமூகம் மீதான அச்சுறுத்தல்கள் போன்றன கடந்த ஆண்டு முதல் அதிகரித்துள்ளதாகவும் ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ளபோதும், தற்போதைய அரசாங்கம் விசாரணைகள், வழக்குகள் மற்றும் ஐநாவின் முன்னைய தீர்மானங்களின் முன்னேற்றங்களையும் தடுக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய போக்கு எதிர்காலத்தில் கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை, சர்வதேச சமூகத்தின் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் வலுவான தடுப்பு நடவடிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளது.
பொது மக்கள் செயற்பாடுகளில் இராணுவத்தின் ஈடுபாடு, அரசியலமைப்பு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள விடயங்களை மாற்றியமைத்தல், பொறுப்புக்கூறலுக்கான தடை, சிவில் சமூகம் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு போன்றன மனித உரிமைகள் மீறப்படுவதற்கான ஆரம்பகால எச்சரிக்கைச் சமிக்ஞைகளாக இருப்பதாகவும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.