மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் நாசிவன் தீவு கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தினை நிறுத்துமாறு தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாசிவன் தீவு கிராமத்தில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் கையில் கோஷங்களை எழுப்பியவாறு தியாவட்டவான், ஓட்டமாவடி ஆகிய கிராமங்களை ஊடறுத்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று வாழைச்சேனையை வந்தடைந்தனர்.
‘சிவன் தீவு மண் வளத்தை சுரண்டாதே, எமது வளம் எமக்கு வேண்டும், சிவன் தீவு மக்களின் குடிநீரை உப்பு நீராக்காதே, மண் மாபியாக்களை வெளியேற்று’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும், கோறளைப்பற்று பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நீடித்தது.
இதன்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் மக்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.