புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும், இனவாதத்தை தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்திற்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால் தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன- மத உரிமைகளை பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும், இந்த அரசியல் அமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசியல் அமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளை சார்ந்தது. அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.