January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலை அனுமதி வெட்டுப் புள்ளி சர்ச்சை: கல்வி அமைச்சர் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

File Photo

பல்கலைக்கழக அனுமதிக்கான  வெட்டு புள்ளி குறித்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் உள்ளிட்ட ஐவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ரிட் மனுவை 2019 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று தாக்கல் செய்திருந்தது.

குறித்த மனுக்கள் சோபித ராஜகருண, தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய நிதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை பரிசீலித்த நீதியரசர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை மார்ச் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2019 ஆண்டு உயர்தர பரீட்சையில் கணிதம், உயிரியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் சித்தியடைந்த தங்களுக்கு பரீட்சையின் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய முறைமையில் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் படி பல்கலைக்கழக நுழைவு, வெட்டு புள்ளியில் கணிசமான வேறுபாடு இருப்பதாகவும் இதனால் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் சமமான அல்லது நியாயமான பல்கலைக்கழக நுழைவு, வெட்டு புள்ளி முறையை அறிவிக்கும் படி உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படியே பிரதிவாதிகளை மார்ச் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.