யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 26 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களிக்க, 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
அதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் என 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
இதற்கமைய மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன் தரப்பினர் கைப்பற்றிய பின்னர் முதலாவது வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.