அரசாங்கத்தின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு இன்று (22) பாராளுமன்றதில் சமர்பிக்கப்படவுள்ளது.
இந்த மாதம் 2 ஆம் திகதி அமைச்சாரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய 20 ஆவது திருத்த வரைப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்குவதற்காகவும் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதி அமைச்சர் இன்று முற்பகல் பாராளுமன்றம் கூடும் போது அதனை சபையில் சமர்பிக்கவுள்ளார். எவ்வாறாயினும் இந்த அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் உள்ளவாறு அவ்வாறே சமர்ப்பிக்கப்படும் எனவும், யாருக்கேனும் இதில் திருத்தம் செய்யவேண்டுமாயின் குழுநிலையின் போது அது பற்றிய யோசனைகளை முன்வைக்கலாம் என்று அமைச்சர் ஜீ.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு யாரேனும் எண்ணியிருந்தாலும் அதனையும் செய்யலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான எதிர்ப்புக்களை உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம்.
அது தொடர்பான விசாரணைகளை உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும் என்பதுடன், இதன்பின்னர் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஆனபோதும் எக்காரணத்திற்காகவும் 20 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானியை வாபஸ் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.