January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணையில் செல்ல அனுமதி!

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கிகு கடந்த 22 ஆம் திகதிய விசாரணைக்கு எடுக்துக்கொள்ளப்பட்டபோது அதற்கு முந்தைய வழக்கில் ஆஜராகாததன் காரணமாக  பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த  குறித்த மூவரையும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழங்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கின் பின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது ஒரு தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடம் என்று தொல்லியல் கட்டளை சட்டத்தின் 15டி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டதன் காரணமாக மூவரும் விளக்கமறியலிலே இருந்தார்கள் என்றார்.

இன்றைய வழக்கில் பொலிஸ்சார் சார்பில் குற்றப்பத்திரிகை ஒன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால் அவருக்கு பிணை வழங்க முடியாது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்படுவதை எதிர்த்து தாம் வாதிட்டதாக அவர் தெரிவித்தார்.

நீதவான் ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருந்தால் மாத்திரமே அந்த குற்றப்பத்திரத்தை கையொப்பம் இட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவார் என சுட்டிக்காட்டினார்.

ஆனால் இந்த வழக்கிலே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நாங்கள் மன்றுக்கு தெரிவித்திருந்தோம் என்றார்.

அதுமட்டுமன்றி சேதம் விளைவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற மரத்தினாலான ஏணியை அகற்றி இரும்பினாலான ஏணியை வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் மரத்தாலான ஏணிக்கு பதிலாக இரும்பாலான ஏணியை செய்வதற்கு 2018ம் ஆண்டில் இருந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை பிரயோகிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது மட்டுமல்லாது அவ்விடயத்தை விரைவாக செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆகவே இந்த ஆவணங்களை எல்லாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த போது நீதிமன்றம் அவற்றை பார்வையிட்டது. கொடுக்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் அரசாங்கமே இதனை திருத்தி அமைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது என்பது புலனாகுவதன் காரணமாகவும், யார் எவ்வாறான சேதங்களை விளைவித்தார்கள் என்ற ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஆலய நிர்வாக சபையினர் என்ற காரணத்தினால் மாத்திரம் அவர்களுக்கு எதிராக இவ்வாறான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் சமர்ப்பிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் இந்த விபரங்கள் கொடுக்கப்படாத காரணத்தினால் குற்றவியல் சட்டக்கோவை 102 இன் கீழ் நீதவானுக்கு குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று தீர்மானித்து குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

வழக்கினை தொடர்ந்து புலன்விசாரணை செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் தொடர்ந்தும் அதே நிபந்தனையில் நிற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் சிரேஸ்ட சட்டத்தரணி க. தயாபரன், அன்டன் புனிதநாயகம், குரூஸ் உட்பட சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன் உட்பட்ட சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகியிருந்தனர்.