இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் எவருக்கும் பலவந்தமாக ஏற்றப்பட மாட்டாது என்றும் சுய தீர்மானத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் தொகுதி கொரோனா தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிலையில், தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் சுய தீர்மானத்தின் அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் வாக்காளர் இடாப்பில் இருந்தே தடுப்பூசிகள் விநியோகிப்பதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும், தடுப்பூசிகளை வழங்கும் போது மக்களிடம் ஒப்புதல் கையொப்பமொன்று பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குமே தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனையவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கப்படுவதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க தாம் தயாராக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.