இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இணையவழியாக நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியன இணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தகுந்த திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசாங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் மற்றும் நல்லாட்சி தொடர்பான ஜி.எஸ்.பி+ திட்டத்தின் கீழ் உள்ள 27 சர்வதேச சாசனங்களை திறம்பட செயற்படுத்தவுள்ளதாகவும் இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேநேரம், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.