January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையில் தமிழர் வளர்க்கும் கால்நடைகளுக்குக் கூட வாழ முடியாத நிலைமையே காணப்படுகின்றது”

தற்போது இலங்கையில் தமிழர் மாத்திரமல்ல தமிழரின் கால் நடைகளுக்குக் கூட வாழமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பார்க்கின்ற போது தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழலாமா? என்ற ஐயப்பாடு எழுகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகநாடுகள் அனைத்தும் கொரோனா நோயினை எவ்வாறு ஒழிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கையில்,  இலங்கை அரசாங்கமோ வடகிழக்கு பிரதேசங்களில் எவ்வாறு தமிழர்களை அடக்க முடியும், தமிழர்களுடைய நிலங்களை எவ்வாறு ஆக்கிரமிக்க முடியும் என்றே சிந்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அறுபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் சொல்ல முடியாத வடுக்களைத் தொடர்ச்சியாக அனுபவித்த தமிழர்களின் வாழ்விடங்களை அகற்றுவதற்கும், ஆலயங்களை கையகப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

மேலும் இன்று தமிழர்களான மனிதர்கள் மாத்திரமல்ல தமிழர்களின் கால்நடைகள் கூட இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் கூட ஈவிரக்கமற்ற முறையில் அண்மைக் காலமாக கொல்லப்படுகின்றது. இவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் அராஜக அரசாங்கம் செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.