File Photo
இலங்கை துறைமுக ஊழியர்கள் நாளை முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு கையளிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு துறைமுக தொழிற்சங்கங்கள் பல ஆதரவளிக்கவுள்ளதாக கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதும், அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருக்கும் நிலையில், அதற்கு எதிராக ஆரம்பக்கட்டமாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவ்வாறான போராட்டம் தொடர்பாக இதுவரையில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், துறைமுக பணிகள் அத்தியாவசிய சேவைகள் என்பதனால் இது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயாகமகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, நாளை மறுதினம் ஜனாதிபதிக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.