July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதற்காக அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை’

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவை நாம் ஆதரிக்கின்றோம், ஆனால் இந்த ஆணைக்குழு விரிவானதும், ஒழுக்கமான முறையில் செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மேம்படுத்தி சகல மக்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் நடந்தவை என்ன, கைவிடப்பட்டவை என்ன என்பது குறித்தும் தாம் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதற்காக அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்க கடந்த காலத்தில் ஆரோக்கியமான தீர்மானங்களை எட்டக்கூடிய வாய்ப்புகள் இருந்தன . ஆனால் நல்ல வாய்ப்புகள் கைவிடப்பட்டுள்ளதாகவே இப்போது கருத வேண்டியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராயும் நடவடிக்கைகளை இலங்கையின் சுயாதீனத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றோ அல்லது இலங்கையை அழுத்தங்களுக்கு உட்படுத்த எடுக்கும் நடவடிக்கை என்றோ இலங்கை கருதக் கூடாது.

இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் வேலைத்திட்டமாகவே இவை முன்னெடுக்கப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். மாறாக பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாக நினைக்கக்கூடாது. அதேபோல் இந்த விடயத்தில் இலங்கையை கீழ்மட்ட நிலையில் சிந்திப்பதாக கருதுவதும், விமர்சிப்பதும் உண்மைக்கு புறம்பானதாகும்.

இலங்கையின் நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட நாம் கடைப்பிடிக்கும் பிரதான கொள்கை திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. குறிப்பாக மனித உரிமையுடன் தொடர்புபட்ட விடயங்களில் நாம் கவனம் செலுத்துவோம்.
அவற்றை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஜனநாயக நாடாக நாம் அவற்றிற்கு மதிப்பளிப்போம்.

புதிய ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமை விடயங்கள் குறித்து ஆராயப்படும். இந்த விடயத்தில் எமது கொள்கைத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.