January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா குறித்து கருத்துத் தெரிவிக்குமளவுக்கு மனித உரிமைகள் பேரவை சுகாதார நிபுணத்துவம் கொண்டதா?’

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், கொவிட்- 19 விடயத்தில் மனித உரிமைகள் பேரவை கருத்து தெரிவிக்கும் அளவுக்கு சுகாதார நிபுணத்துவம் கொண்டதா? என்ற கேள்வி தம்மத்தியில் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளார் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்யவும், எரிக்கவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தாலும், அந்தந்த நாடுகளின் நிலைமைகளுக்கு அமைய இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளார் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா உயிரிழப்புகள் விடயத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இலங்கையின் சுகாதார அதிகாரிகளிடமே உள்ளதாகவும் அதற்மையவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஒரு பிராந்தியத்தில் முழுமையாக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றதாகவும், அங்கு கொவிட்- 19 வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களை புதைக்க அனுமதிக்கவில்லை என்பதையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்று ஐநா மனித உரிமைகள் பேரவை நேற்று தெரிவித்த நிலையிலேயே, அதற்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.