பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ள நிலையில், அடிப்படை நாட்சம்பளமாக 860 ரூபாவும், இதர கொடுப்பனவுகளாக 140 ரூபாவும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அடிப்படை நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்றும் வாழ்க்கைச் சுட்டெண்ணுக்கமைய அவர்களுக்கான வேதனம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.