May 4, 2025 14:42:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக நிதி மூலம் இலங்கையர்களை அழைத்துவரத் திட்டம்!

வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவர வேலைவாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்களை குறித்த நிதியத்தை பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர எந்த தடையும் இல்லை என பணியகமும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக தொழிலை இழந்த 34,721 பணியாளர்கள் தங்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் குறித்து கண்டறிவதற்கு பணியகத்தினால் பொருத்தமான மாதிரியொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு 800 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவ் ஊழியர்களால் எதிர்பார்க்கப்படும் சேவைகள் வழங்கப்படுகின்றதா என்பதை கண்டறிய வேண்டுமென கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.