முஸ்லிம்களை வைத்து காய்நகர்த்தும் பெரும்பான்மை அரசியலின் பகடைக்காய்களாக முஸ்லிம் தலைவர்கள் இருக்க முடியாது என்று தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இலங்கையில் முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்யும் போக்கை பெரும்பான்மை பிரதான கட்சிகளும், பெரும்பான்மை இனவாதக் கட்சிகளும் கடைபிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை சமூகத்தில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை ஏற்படுத்தி, அரசியல் இலாபம் தேடி வருகின்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலமிழந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒரு அமைப்பின் கீழ் வர வேண்டும் என்றும் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயல்பட வேண்டும் என்று தேசிய விடுதலை மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.