July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 100 நீதிமன்றங்களை நிர்மாணிக்க நடவடிக்கை

இலங்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 100 நீதிமன்ற கூடங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன்கீழ், பலமாடி நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கும் தற்போது காணப்படுகின்ற கட்டடங்களை திருத்தியமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடங்களை நிர்மாணிக்கும் அனுபவங்களைக் கொண்ட பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய பணியகத்திடமிருந்து தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்கிவரும் நீதிமன்றங்களில் அதிகளவு வழக்குகள் தேங்கிக் கிடக்கின்ற காரணத்தினால், அதற்குத் தீர்வாக நீதிமன்ற நீதவான்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, நீதிமன்றங்களின் ஏனைய வசதிகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.