தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவில் இருந்து குறைக்க அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தோட்டக் கம்பனிகளின் தொடர் கருத்து முரண்பாடுகளால் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்க முடியாதுள்ளதாகவும், தோட்ட கம்பனிகள் அதனை ஏற்றுக்கொள்ளாத வேளையில், அரசாங்க திறைசேரி மூலம் இதனைக் கையாள பிரதமர் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் தமது வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள தற்போதுள்ள நடைமுறையில் உள்ள தோட்ட வீடமைப்பு யோசனைத் திட்டத்தைத் திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு லயன் அறைகளுக்குப் பதிலாக, புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தோட்ட வீடமைப்பு முறைமை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல்வேறு பொறிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது அரசாங்கத்தின் அனுசரணையுடன் 7 பேர்ச்சர்ஸ் காணி உறுதியுடன் கூடிய 550 சதுர அடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.