July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டாயமாக எரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை விசேட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கையாகவே இந்த கட்டாய எரிப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட தொற்று நோய் நிபுணர்களின் பரிந்துரைகளையும் மீறி, இவ்வாறு உடல்கள் எரிக்கப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்றும் இது பாரிய மனித உரிமை மீறல் என்றும் ஐநா நிபுணர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் எரிக்கப்பட்ட உடல்களுக்கு இலங்கை அரசாங்கம் முறையாக பொறுப்புக் கூற வேண்டும் என்றும் கட்டாய எரிப்பை உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.