இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தி பகுதியில் மலையக சிவில் அமைப்புகளால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்திய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும், சிறு விவசாயிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் நசுக்குவதில் இருந்து அவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தப்போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் 60 நாட்கள் நடைபெறும் தொடர் போராட்டத்தில் இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளமைக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய மத்திய அரசுக்கு கண்டனமும் வெளியிடப்பட்டது.
இதேவேளை இந்தியாவின் அதானி நிறுவனம் தற்போது இலங்கையின் கிழக்கு முனையத்தை பெற்றுக்கொள்வது போல ஏனைய துறைகளின் நிலங்களையும் பெறுவதற்கு திரைமறைவில் சதி நடப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிலங்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.