November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்கள் இராணுவ பிடிக்குள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்’

ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது அரசாங்கமும் இராணுவமும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1958 களில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்குமுறைகளோடு, 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது முதல் இன்றுவரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ பிடிக்குள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போதே போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பதானது, ஒரு கேளிக்கூத்தான விடயம் என்றும் இந்தக் குழுவை சர்வதேசமோ ஐநா மனித உரிமைகள் பேரவையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை உயர் பதவிகளுக்கும், அமைச்சின் செயலாளர்களாகவும், வெளிநாட்டு தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டு வருவதானது, அரசாங்கம் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளதை வெளிப்படையாகக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்றவற்றைக் காரணம் காட்டி, இராணுவ சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, வடக்கு- கிழக்கு பிரதேசங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.