ஐ.நாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு. நாட்டின் நலன் கருதி – உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார். அதில் ஒன்றுதான் புதிய ஜனாதிபதி ஆணைக்குழு. மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. கடந்த நல்லாட்சி அரசு போல் நாட்டின் இறையாண்மையை மீறி ஜனாதிபதி செயற்படமாட்டார்.
புதிய ஆணைக்குழு தயாரிக்கும் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிப்போம். அதில் நாட்டின் நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிடுவோம்.
ஜெனீவா விவகாரத்தை தமது சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துவதை எதிரணியினர் உடன் நிறுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.