தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசுக்கு பரிந்துரைக்க கோரி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் குழுமத் தலைவர் யாட்சன் பிகிறாடோ தலைமையில்,தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள் சார்பாக குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் பொது மக்களான நாம், எமது கோரிக்கையை இத்தாழ் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இம் மனுவின் மூலம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசுக்கு பரிந்துரைக்குமாறு தங்களைக் கோருகிறோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் எனும் வகையில், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தாரின் துயரத்தையும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையையும் தாங்கள் அறிவீர்கள் என நாம் நம்புகிறோம்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள எமது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைகளில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை பலவருடங்களாக இரும்புக் கம்பிகளின் பின்னால் கழித்து வயது மூப்பை அடைந்துள்ளதோடு, நோயாளிகளாயும் ஆகியுள்ளனர்.
தற்போது, 147 தமிழ் அரசியல் கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் 69 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 61 பேருக்கு வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வாறு ரிமான்ட் இல் இருப்பவர்களில் ஏழு பேர் பெண்களாவர். இப்பெண்களில் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் ரிமான்ட் சிறையில் இருக்கிறார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 17 பேர் இன்னும் நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பதின்ம வயதுச் சிறுவர்களும் அடங்குவர்.
தற்போது சிறைகளுக்குள் கோவிட் – 19 பெருந்தொற்று பரவிவருகிறது. 14 தமிழ் அரசியல் கைதிகள் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்களான நாம், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலைகொண்டுள்ளோம்.
எனவே, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் அனைவரையும் விடுவிக்க பரிந்துரைக்குமாறு தங்களைக் கோருகிறோம்.
ஏனெனில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறைகளில் அடைப்பட்டு வெளியுலகத்தைக் காணாதவர்களாக இருப்பதோடு நீண்டகால சிறையிருப்பின் காரணமாக அவர்களின் உடல் உள ஆரோக்கியம் ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ளது.
தொடர்ந்தும் அவர்கள் இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருப்பார்களானால் அவர்களின் ஆயுட்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும். எஸ். மகேஸ்வரன் எனும் தமிழ் அரசியல் கைதி 1993இல் தனது 17வது வயதில் கைதுசெய்யப்பட்டார். 26 வருடங்களை சிறையில் கழித்திருந்த நிலையில் இவ்வருடம் (2021) தை மாதம் முதலாம் திகதி கடும் சுகயீனம் காரணமாக தனது 45வது வயதில் காலமானார்.
அடுத்து, ரிமானட் சிறைகளில் ஏழு தமிழ் பெண் அரசியல் கைதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தனது ஒன்றறை வயது குழந்தையுடன் சிறையில் இருக்கிறார். எனவே, இப் பெண்களின் நிலையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு தாமதமின்றி பிணை வழங்குமாறு நாம் அரசைக் கோருகிறோம்.
அத்தோடு, 14 தமிழ் அரசியல் கைதிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களினதும் ரிமானட் சிறைகளில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளினதும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்களின் நீதி விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களுக்க பிணை வழங்குமாறு கோருகிறோம்.
இவர்களைத் தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பதின்ம வயதினரும் அடங்குவர். இவர்கள் அனைவரையும் நீதிமன்றில் ஆஜராக்குமாறு நாம் உரிய அதிகாரிகளைக் கோருவதுடன் அவர்களை பிணையில் விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோருகிறோம்.
எமது இந்த கோரிக்கைக்கு தாங்கள் உரிய முக்கியத்துவம் அளித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைப்பீர்கள் என நம்புகிறோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.