January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வில்பத்து காடு மீள் வளர்ப்புத் திட்டத்திற்கு ரிஷாட் பதியுதீனிடம் 1075 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானம்!

வில்பத்து காடு மீள் வளர்ப்புத் திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் 1075 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வில்பத்து காடழிப்பு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு, காட்டை மீள் வளர்க்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காடு மீள் வளர்ப்புத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி செலவாகும் என்பதை ஆராய வன பாதுகாப்புத் திணைக்களம் குழுவொன்றை நியமித்திருந்தது.

மன்னார் மாவட்டத்தில் அதிகளவு காடழிப்பு இடம்பெற்றிருந்தாலும், 66 ஹெக்டெயார் நிலப் பரப்பில் காடு மீள் வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ள இவ்விடயத்தை ஆராய்ந்த வன பாதுகாப்புத் திணைக்கள நிபுணர் குழு தீர்மானித்துள்ளது.

அதற்கு செலவாகும் நிதியையே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.