நாட்டு மக்கள் தொடர்ந்தும் காலாவதியான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்களை இவ்வாறான அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய ‘நீதி இல்லம்’ நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் உதவியை நாடும் பொது மக்களின் இல்லமாக புதிய கட்டடத் தொகுதி அமைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் தாம் முன்னிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீதி வழங்குவதன் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், பிரச்சினைகளைத் திறம்பட தீர்ப்பதற்குமான அணுகுமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதோடு, நாட்டு மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.