இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முதல் கட்டமாக கொண்டுவரப்படும் தடுப்பூசிகளில், இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தில் இருந்து மூன்று இலட்சம் வரையான தனி நபர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களில் ஐம்பது வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்டமாக பொதுமக்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள மிக முக்கிய நோயாளிகள், வயதானவர்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி அதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை மக்களில் 20 வீதமானவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிலான கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் வழங்கும் 20 வீதமான தடுப்பூசிகளை ஏனையவர்களுக்கு கொடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் எம்மால் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.