July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மகாவம்சத்தின்படி இந்த நாடு 75 வீதத்துக்கு மேல் தமிழர்களுக்கு உரித்தானது’

மகாவம்சத்தின்படி இந்த நாடு 75 வீதத்துக்கு மேல் தமிழர்களுக்கு உரித்தான பகுதியாக உள்ளது. தமிழர்களின் தொல்பொருள் அடங்கிய, அனுராதபுரம், பொலன்னறுவையை தமிழர் ஆண்டிருக்கின்றான். எனினும் நாங்கள் அந்த பகுதிகளை கேட்டோமா? என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு கிழக்கு ஊடக ஒன்றியத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தொல்பொருள் என்று கூறிக்கொண்டு இந்து ஆலையங்களை இடிப்பதையும் அதில் பௌத்த விகாரைகளை அமைப்பதையும் இந்த பேரினவாத அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. இது தொடருமாக இருந்தால் சாத்வீக ரீதியில் பல போராட்டங்களை முன்னெடுக்க தயாரக இருக்கின்றோம் என்றார்.

மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இது கூடுதலாக இருந்தது. மைத்திரிபால சிறிசேன காலத்தில் அதனை நாங்கள் தடுத்திருந்தோம். இப்போது கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் இது மிக தீவிரமாக உருவெடுத்துள்ளது. பௌத்த பிக்குகள் மிக நீண்ட காலமாக அங்கு வசித்ததாகவும் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வந்ததாகவும் தெரிவித்து சிலபகுதிகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

தொல்பொருள் என்று மையப்படுத்தினால் அது பொதுவாக இருக்கவேண்டும். அங்கு ஏன் பௌத்த விகாரை அமைக்க வேண்டும் ? தொல்பொருள் என்று கூறிக்கொண்டு தமிழ் பகுதிகளை சுவீகரிக்கத் திட்டமிட்டு செயற்படுகின்றார்கள் எனவும் கூறினார்.

அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் மன்னனை, துட்டகைமுனு மன்னன் 32 தமிழ் சிற்றரசர்களை கூட்டிச் சென்று கொன்றுவிட்டு அந்த இடத்தை கைப்பற்றியதாக மகாவம்சம் கூறுகின்றது. எனவே 32 பகுதிகள் அந்த காலத்தில் தமிழ் சிற்றரசர்களின் கையிலேயே இருந்துள்ளது. எனவே நாங்கள் அனுராதபுரத்தை, பொலன்னறுவையை கேட்டோமா? அங்கெல்லாம் எங்கள் தொல்பொருள் அடையாளங்கள் இருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.

தமிழர்களின் சனத்தொகையை குறைப்பதற்காக பயிர் செய்கை, பௌத்த விகாரை, இராணுவ வீடமைப்பு, மக்கள் குடியேற்றம், மகாவலி சுவீகரிப்பு என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரம் இராணுவத்தினருக்கு வீட்டுத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது இதனை அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.

இந்த கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமான செயலை செய்கின்றது. இதனை ஏற்கமுடியாது, இதில் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெறுகின்றது. இதில் சர்வதேசம் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். அதேவேளை இந்த செய்தியை ஐக்கிய நாடுகள் சபை, யுனஸ்கோவுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்.