January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் தொடர்பான முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது”

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையும், இந்தியா- ஜப்பான் நாடுகளும் இணைந்து அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியா – ஜப்பான் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை இணைந்தே செயற்படும் எனவும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியாதுள்ளமையும் இந்த தீர்மானத்திற்கு பிரதான காரணம் என்பதை அமைச்சரவை உபகுழு சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு முனையத்தை எக்காரணம் கொண்டும் இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது எனவும் துறைமுக அதிகார சபையே இதனை தன்வசப்படுத்த வேண்டும் என துறைமுகத்தில் அங்கம் வகிக்கும் 23 தொழிற்சங்கங்களும் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

எனினும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தற்போது துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 51 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் 49 வீதம் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என்ற தீர்மானமே இறுதித் தீர்மானமாக உள்ளதாக அமைச்சரவை உபகுழுவின் தலைவர் யு.டி.சி. ஜெயலால் தெரிவித்துள்ளார்.