மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கோவில் மோட்டை’ பகுதியில் பாரம்பரியமாக விவசாய செய்கைகளை மேற்கொண்டு வந்த அரச காணிகளை மத ஸ்தாபனம் ஒன்றுக்கு வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 30 வருடங்களாக கோவில் மோட்டை பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொள்ளும் 27 குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டு தமது நிலங்களை தமக்கே வழங்குமாறு கோரி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கிராம மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற நிலையில் கோவில் மோட்டை பகுதியில் விவசாய செய்கைகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளை பிரிதொரு உரிமையாளருக்கு வழங்குவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மடு பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கையினை முன் வைத்துள்ளதுடன் தமது பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.