
File Photo: Twitter/ Srilanka Red cross
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும், இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடையும் நோயாளர்களின் எண்ணிக்கையை விடவும் இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக அந்தச் சங்கத்தின் வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு செல்லும் நோயாளர்களை விடவும், அதிகமான நோயாளர்கள் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்களாக இருந்தால் சிகிச்சையளிப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டு நாடு பேராபத்துக்குள் தள்ளப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பொறிமுறைகளை தாமதமின்றி தயாரிக்க வேண்டுமென வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில வாரங்களாக மேல் மாகாணத்தில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்த போதும், தற்போது மீண்டும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், இது ஏன் என்று அதிகாரிகள் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.