
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன் கவலை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டன் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்- 19 காரணமாக உயிரிழந்தவர்களை கட்டாயமாக எரிக்கும் நடைமுறை உட்பட இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அவதானமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐநா அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும், பிரிட்டனின் அணுகுமுறைகள் குறித்த ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கப்படும் என்றும் தூதுவர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
UK raising human rights concerns with Sri Lanka, including forced cremation of #COVID19 victims. UN report to be published next week, will inform the approach to @UN_HRC
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) January 24, 2021
இதேநேரம், பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹ்மட் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, கொரோனா தொற்றால் உயிரிழந்த மதக் குழுக்களின் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்துவதன் தாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததாக பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
ஐநா அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அதற்குப் பதிலளிப்பதற்கு இம்மாதம் 27 ஆம் திகதி வரை கால வரையறை வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.