January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழர்களின் அடையாளங்களை ராஜபக்‌ஷ அரசாங்கம் சிதைக்க முயற்சிக்கின்றது”

தமிழர்களின் அடையாளங்களை ராஜபக்‌ஷ அரசாங்கம் சிதைத்து தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்கு உள்ளாகுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  தெரிவித்துள்ளார்.

ஜெயந்தி நகர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழா மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்கள் உணர்வுகளுக்கு அப்பால், ஒரு இனம் பற்றிய சரியான சிந்தனையோடும் தமிழ்த் தேசிய இனமாக ஒரு தனித்துவ அடையாளத்தோடும்  வாழ்கின்றனர்.

தற்போது பார்க்கின்ற இடங்களெல்லாம் தொல்லியல் திணைக்களம் தொல்பொருள் அடையாளங்களை தோண்டுகின்றோம் என்ற பெயரில் காணிகளை அபகரித்து எங்களுடைய இருப்பை கேள்விக்கு உட்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் எங்கள் காணிகளை பிடித்து விவசாயம் செய்யும் நிலையில், எங்களை பொருளாதார ரீதியிலும் முடக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிங்கள மொழியாலும் சிங்கள கலாசாரத்தாலும் சிங்கள அரசாங்கத்தினுடைய அரச இயந்திரத்தினாலும் நாங்கள் கபளீகரம் செய்தும், எமது இனத்தை சுத்திகரிப்புக்கு உள்ளாக்கவும் முயற்சிக்கின்றனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.