இலங்கையில் முஸ்லிம் சட்டமான காதி நீதிமன்றம் செயற்படுவதை அரசாங்கமாக தாம் விரும்பவில்லை எனவும் புதிய அரசியல் அமைப்பில் காதி சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சகல மக்களுக்கும் ஒரே சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றால் போல் சட்டங்களை உருவாக்கி சமூக முரண்பாடுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காதி நீதிமன்ற கட்டமைப்பை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை எனவும், காதி நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை காலம் நடைமுறையில் இருந்த சட்டங்கள் பற்றி நாம் கவலைப்படவில்லை, ஆனால் இனிமேல் நாட்டிற்கு ஏற்ற ஒழுக்கக்கோவை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை அரசாங்கம் விரும்புவதாகவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இதற்கு பூரண ஒத்துழைப்புகள் இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.