இலங்கை அரசாங்கத்திற்கு சீனாவின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை நிராகரிக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும், சீனாவை நம்பிக்கொண்டு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் நாட்டை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் அரசாங்கம் தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு இலங்கைக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை, இது வெறுமனே கண்துடைப்பு நாடகம் என்பதை சர்வதேசம் நன்கு அறியும் எனவும் அவர் கூறினார்.
ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை ஏற்றுக்கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே தொடர்ச்சியாக பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்றார்.
நல்லாட்சி அரசாங்கம் புதிதாக பிரேரணையை கொண்டுவந்து இலங்கை இராணுவத்தை போர் குற்றங்களில் சிக்கவைக்கவில்லை என குறிப்பிட்ட அவர் போர் குற்றங்களில் சிக்கவிருந்த இராணுவத்தையும், அதற்கு துணை நின்ற தலைவர்களையும் தமது அரசாங்கத்தில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக காப்பாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை நாம் நிராகரிக்காது இணை அனுசரணை வழங்கியதன் மூலமாகவே இலங்கைக்கான சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றது. தற்போதைய அரசாங்கம் பிரேரணையில் இருந்து விலகிக்கொள்வதாக கூறியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலைமை தொடருமாயின் இலங்கை தனித்து விடப்படுவதுடன், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கும் உள்ளாக நேரிடும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.