July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தாய்லாந்து, சீனா போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன’

தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினுடைய கப்பலினால் இந்திய மீனவர்களின் வள்ளம் மூழ்கடிக்கப்பட்டு, நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ள அவர் தமது கடந்த காலப் போராட்டத்தில் இந்தியத் தமிழர்களுடைய அதிலும் குறிப்பாக, மீனவர்களுடைய பங்கு என்பது அளப்பரியது. அதனை நாம் மறுப்பதற்கில்லை எனவும்  கூறியுள்ளார்.

மீனவர்கள் அத்துமீறும் போது கைதுகள் நடந்திருக்கின்றன. அவ்வாறே தற்போதும் நடந்திருக்கலாம். ஆனால், அதற்கு மேலதிகமாகச் சென்று நான்கு மீனவர்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் இதுபோன்ற பிரச்சினைகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க குறைந்தபட்ச நடவடிக்கைகளையேனும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதேவேளை, தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது எனவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசாங்கம் அவை தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட கடலில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா கடலில் இந்திய தமிழ் மீனவர்களும் வடக்கு மாகாண தமிழ் மீனவர்களும்  மீன் பிடிப்பதென்பது தொடர்ந்தும் நடைபெற்று வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகளை இரு தரப்பு மீனவர்களும் அரசாங்கங்களும் இணைந்து சுமூகமாகப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும்.  இதனைவிடுத்து வேறு நடவடிக்கைகளை எடுப்பதென்பது தவறானது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எமது அனைத்து தமிழ் மக்களின் அனுதாபங்களும் இறந்த தமிழக மீனவர்கள் மேல் நிச்சயமாக உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.