November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய பேச்சுவார்த்தையில் ஜப்பானும் இணைந்தது!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் இந்திய தரப்புடன் தாமும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக ஜப்பான் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் (ஈ.சி.டி) வெளிநாட்டு முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 49 வீத உரிமத்தில் முழுவதுமாக இந்தியாவிற்கு மாத்திரம் கொடுப்பதாகவும், இந்த உடன்படிக்கையிலிருந்து ஜப்பான் விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய உடன்படிக்கையில் ஜப்பான் முதலீடுகள் குறித்து எதுவும் சுட்டிக்காட்டப்படாததன் காரணமாக ஜப்பான் இந்த வேலைத்திட்டத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளது என பொதுவான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போது கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் தாமும் இந்த பேச்சுவர்த்தையில் உள்ளதாகவும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளாக இவை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 49 வீத உரிமத்தில் எந்தவொரு நாடும் இணைந்துகொள்ள முடியும் எனவும், 51 வீத உரிமம் எப்போதுமே இலங்கை துறைமுக அதிகார சபையின் வசம் இருக்கும் எனவும் அதன் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.