January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு சொத்து முடக்கம், பயணத் தடை எச்சரிக்கையை விடுத்துள்ளார்’

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் சமீபத்திய அறிக்கையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு அமைவாக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை விதிப்பது தொடர்பான எச்சரிக்கைகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

கொழும்பு, சன்டே டைம்ஸ் இணையத்தளத்தில் இது தொடர்பாக செய்தி வெளிடப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்த அறிக்கைக்கு பதிலளிக்க ஜனவரி 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு செயலாளரான பேராசிரியர்  அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) நடவடிக்கைகளை தொடங்கவும், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கவும் ஒரு சர்வதேச பொறிமுறையை அமைக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாக சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அவை நிரூபிக்கப்படாதவை எனவும் இதனைவிட இந்தச் சமயத்தில் முற்றிலும் பொருத்தமற்றவை என தாங்கள் கருதும் சில விடயங்களும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளதாகவும் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

எங்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் சில நாடுகளையும் விட இலங்கை மிகவும் அமைதியானதாகவும் நிலையானதாகவும் உள்ளதாகவே நாங்கள் உணர்கிறோம் எனவும் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

தம்னைப் பொறுத்தவரை முந்தைய அறிக்கைகளை விடவும் இந்த அறிக்கை மோசமானது என தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர், ஆபத்தான போக்கு உருவாகி வருவதை குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 30/1 தீர்மானத்தில் முந்தைய அரசு வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றியுள்ளது என குறிப்பிட்டுள்ள அட்மிரல் கொலம்பேகே, இவ் அறிக்கையானது புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.