January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”யார் எதிர்த்தாலும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படும்”

Photo: Facebook/ Nimal Lanza

யார் எதிர்ப்பு வெளியிட்டாலும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று கிராமிய அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

வத்தளை கெரவலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முதலீடுகள் அவசியமானது.

இதனால் இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய எந்த நாடு முன்வந்தாலும் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு முதலீடுகள் கிடைக்கும் போது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் நாங்கள் கிழக்கு முனையத்தில் முதலீடு செய்ய இந்தியாவின் நிறுவனத்திற்கு வாய்ப்பளிப்போம் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அருகிலுள்ள நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.