July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகள் போராட்டம்: குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி

(FilePhoto/Twitter)

புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள குடியரசு தினத்தில்  டிராக்டர் பேரணி நடத்துவதற்காக டெல்லி நோக்கி பயணித்துள்ளனர்.

டெல்லி பொலிஸார் குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி வெளிப்புற சாலையில் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நகரில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 59 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இறுதியாக நடந்த 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் டெல்லியில் குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் செங்கோட்டையில் நடைபெறும் விழாவைத் தொடர்ந்து டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்புக்கு போட்டியாக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடைபெறும். எந்த வன்முறைக்கும், தவறுகளுக்கும் இடம் இருக்காது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரணியை ஒழுங்குபடுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் 2,500 தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர். பேரணியை வழிநடத்த கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

“பேரணி முடிந்ததும் அனைத்து டிராக்டர்களும் எல்லை பகுதிக்கு திரும்பி விடும். டெல்லி நகருக்குள் யாரும் இருக்க மாட்டோம் எனவும் பழைய முகாம்களுக்கே மீண்டும் வந்து விடுவோம்”  எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.