January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ராஜபக்‌ஷ அரசாங்கம் பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பித்துவிட முடியாது”

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு, புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களைப் பயன்படுத்திப் பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து தப்பித்துவிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்டுள்ள மூவரடங்கிய ஆணைக்குழு தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன கூட்டாக நிலைப்பாட்டை விபரித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொறுப்புக்கூறலைச் செய்விப்பதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்வதற்குமான எமது முயற்சிகள் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபினமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இற்றைவரையில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கடந்த காலங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான சிபார்சுகளைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அந்த பரிந்துரைகள், தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை என்றார்.

இந்நிலையில்தான் ஜனாதிபதி கோட்டாபய பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்குப் புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்றாகும் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தம்மைப் பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவானது ஏமாற்று வித்தையாகும். அதற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது தமக்கு நம்பிக்கையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என தெரிவித்த அவர் தமது மக்களுக்கான பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான தமது தீவிர செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை என்றார்.