
இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட வரைபை இன்னும் ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியுமாக இருக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியலமைப்பின் முதற்கட்ட வரைபு அது தொடர்பான நிபுணர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்தப் பணிகள் முடிவடைந்ததும் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு புதிய அரசியலமைப்பு தயாரிப்புப் பணிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே நீதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை தயாரிக்கும் நிபுணர் குழுவினர் தமது வரைபு பணிகளுடன் இணைந்ததாக தற்போது அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற்றுவருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளுக்காக கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான மனோஹர த சில்வா, காமினி மாரப்பன, சஞ்சீவ ஜயவர்தன, சமந்த ரத்வத்த ஆகியோரும் பேராசிரியர்களான நதீமா கமுர்தீன், ஜீ.எச் பீரிஸ், வசந்த செனவிரத்ன மற்றும் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.