May 24, 2025 15:59:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களும் இந்த நிகழ்வில் இணைந்துகொண்டன.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போது 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.