January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்துக்களின் புராதன இடங்களில் வழிபாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுமதியளிக்க வேண்டும்’

இலங்கையில் இந்துக்களின் புராதன வழிபாட்டு இடங்களில் பூசை வழிபாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் அ. மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று வவுனியா நொச்சிமோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொல்லியல் திணைக்களம் புராதன இடங்களுக்கு சென்று அங்கு வழிபாடுகளை செய்வதற்கு தடைவிதித்து வருகின்றது.

நாங்கள் வெறுமனே ஆலயங்களில் மட்டும் வழிபட்டு வருபவர்கள் அல்ல, இங்குள்ள புராதான இடங்களிலும் வழிபட்டு வருகின்றோம். இந்நிலையில், புராதான இடமான வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் கைது செய்யப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களமானது கொடுப்பனவை பெற்றுக்கொண்டு செயற்படுகின்றது. ஆனால் நாங்கள் மண்னை, மரத்தை, வழிபட்டு வருவதோடு நாங்கள் எந்தவித கொடுப்பனவும் இல்லாமல் எங்கள் புராதன இடங்களை பாதுகாத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் உள்ள புராதன இடங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் எங்களது கலாசாரம் சார்ந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்குடனே எங்களது ஆலயங்களாக இருக்கட்டும் அல்லது அமைப்புக்களாக இருக்கட்டும், பரிபாலன சபைகள் அனைத்துமே செயற்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவிலே குறுந்தூர்மலையிலே ஆதிகாலம் தொட்டு ஆதிலிங்கேஸ்வரர் வழிபாடு முறைகள் இருந்து வருகின்றது.

ஆனால் தொல்பொருள் திணைக்களம் அங்கு சென்று வழிபாட்டு முறைகளிலே இருக்கக்கூடிய எங்களது வழிபாட்டு சின்னங்களை சிதைத்து இருப்பது கவலையளிக்கும் விடயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரும் நேரடியாக கவனித்து எங்களது வழிபாட்டு முறைகளை அறிந்த நீங்கள் எங்களது வழிபாட்டுக்காக அனைத்து ஆலயங்களிலும் சென்று வழிபடுவதற்கு அனைவருக்கும் சமத்துவமான உரிமையை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.