
இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள ‘எம்வி யுரோசன்’ என்ற லைபீரிய கப்பலின் நிலைமை தொடர்பாக கடற்படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
இன்று காலை இலங்கைக் கடற்படையின் சுழியோடிகள் குழுவொன்று கப்பலின் அடிப்பகுதிக்கு சென்று ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.
இதன்போது கற்பறையில் மோதியதால் கப்பலின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளமையை சுழியோடிகள் அவதானித்துள்ளதாக கடற்படைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரையில் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கடற்படையினர் கப்பல் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், இதற்கு விமானப் படையினரின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதாபியில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்கு சீமெந்து கொண்டுவந்த குறித்த கப்பல், திருகோணமலை துறைமுகத்தில் இருந்து 12.6 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் ஆழமில்லாத பகுதியூடாக பயணிக்கும் போது, நேற்று மாலை பாறையொன்றில் மோதி விபத்திற்குள்ளாகியது.
கப்பல் விபத்துக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பாக கப்பலின் தலைமை மாலுமியினால் இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்த கடற்படையினர் அது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.