File Photo
இலங்கையின் சுதந்திரத் தின விழாவில் தமிழிலும் தேசியக் கீதத்தை இசைத்து இன நல்லிணக்கத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று புதிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் கடிதமொன்று அனுப்பி வைக்ககப்பட்டுள்ளளது.
பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கைகயின் 73 ஆவது சுதந்திரத் தின தேசிய விழாவை கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விழா எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தும் வகையில் அமைந்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டுமென்று, புதிய ஜனநாயக முன்னணி அந்தக் கடிதத்தின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் அந்த நிகழ்வில் தமிழிலும் தேசியக் கீதத்தை இசைத்து இன நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையை வெளிப்படுத்த வேண்டுமென்று அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாது, அவர்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டுமெனவும், இதற்கான சிறந்த சந்தர்ப்பமாக சுதந்திரத் தின நிகழ்வை பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் புதிய ஜனநாயக முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சுதந்திரத் தின நிகழ்வுகளில் தமிழிலும் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கம் கடந்த சுதந்திரத் தின விழாவில் சிங்களத்தில் மாத்திரம் தேசியக் கீதத்தை இசைக்க நடவடிக்கையெடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.