July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதிய ஆணைக்குழுவால் ஜெனீவாவில் அரசுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை’

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவால் ஜெனீவாவில் அரசுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் கவனத்தில்கொள்ளப்போவதும் இல்லை. இந்த ஆணைக்குழு முழுக் கேலிக்கூத்தாக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இம்முறை ஜெனீவாக் கூட்டத் தொடரில் இலங்கை அரசு பெருமளவில் நெருக்கடிகளைச் சந்திக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இலங்கை தொடர்பில் காத்திரமான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அரசு இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கவே தற்போது மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

ஆனால், இந்த ஆணைக்குழுவால் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க எதனையுமே செய்ய முடியாது என்பதே உண்மையாகும்.

அத்தோடு ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேசம் கருத்தில்கொள்ளப்போவதும் இல்லை.

இலங்கையில் இடம்பெற்று முடிந்த போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவை இடம்பெற்றுள்ளதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசு இதனை ஆராயவோ, உண்மைகளைக் கண்டறியவோ இதுவரை எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை.

மாறாக இலங்கையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், அரசின் ஒருபக்க சார்பை மாத்திரம் வெளிப்படுத்தும் விதத்திலேயே இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் அமைந்திருந்தன.

அவ்வாறு இருக்கையில் முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கையை மீண்டும் வலியுறுத்தும் விதத்தில் புதிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பது முற்று முழுதாக கேலிக்கூத்தாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.